புதன், 10 அக்டோபர், 2018

#96 - #காதலின் #உரையாடல்

              தாழ்ப்பாளிட்ட கதவும், சாவியுமாய் இருவரின் உறவை எவ்வித அலங்காரமும் இல்லாமல் திரை மொழிக்கு கடத்தியிருக்கிறார்கள்.ஒரு அரசுப்பள்ளியின் காதலை தங்கர்பச்சானும், சேரனும் காட்சிப்படுத்திய போதும்,தனியார்பள்ளியின் உயர்த்தனமான காதலை கவுதம் மேனன் காட்சிப்படுத்திய போதும். அரசுஉதவிபெறும் பள்ளிகளை யார் கையில் எடுப்பார்கள் என்று காத்திருந்ததற்கு, காலை பள்ளியின் சூரிய வெளிச்சம் போல் மரங்களின் வழி கவிதையாய் ஒளிர்கிறது இப்படம்.
                      வாழ்வில் கள்ளம் கபடம் ஏறாத பால்யம் போல் தூய்மையான அன்பு எங்குமே இல்லை. அதனுள் கூட்டுப்புழுவிலிருந்து சிறகு முளைக்கும் வண்ணத்து பூச்சி போல் ஒரு காதல் முளைக்கிறது. இவ்வளவு நெருக்கமாய் ஒரு அன்பு நமக்கும் வாய்த்திருக்கதா என்றும், வாய்த்திருந்தவர்கள் மீண்டும் அந்த அன்பை நோக்கி ஏங்கும் முகமாய் திரையரங்கம் முழுதும் நினைவுகளின் அமைதி வழிந்து கொண்டிருந்தது.
                       ஒரு பயண புகைப்படக்காரனின் நாட்களை, இந்தியாவின் நிலவெளிகளில் அலைந்து காலங்களும் , நிலங்களுமாய் விரியும் பாடலில் இருந்து துவங்குகிறது திரைப்படம். ராமின் இயல்பையும், படத்தின் தன்மையையும் விவரித்து செல்வது போல் ,நீருக்குள் செல்லும் கல்லாகவும், நிலத்தில் தரையிறங்கும் இறகாகவும் குறிப்புணர்த்தி நம்மை சற்று உடல் தளர்த்தி அமர செய்கிறது இப்பாடல்.
                  10ம் வகுப்பு படிக்கும் போது ஒரு காதல், 22 வருட பிரிவுக்கு பின் நண்பர்கள் கூடுகையில் இருவரும் மீண்டும் சந்தித்து கொள்கிறார்கள். காலம் ஒரு புகைப்படத்தருணம் போல் அந்த நாட்களுக்கு சென்று அங்கிருந்து அவர்களின் உரையாடல் வழி அந்த 22 வருடங்களிலும் அவர்கள் காதல் எப்படி பயணித்து வந்தது என்பதை.உரையாடல்கள் மூலம் ரசிகனுக்கு கடத்தியிருக்கிறார்கள். நீங்கள் வாழ்வென நேசித்த ஒருவரை, இத்தனை வருட பிரிவிற்கு பிறகு சந்தித்தால் என்ன நிகழுமோ அதை இசையாகவும்,காட்சிகளாகவும், வசனங்களாகவும்
தனித்த இரவின் நீண்ட நடையை போல் மென்மையாக கடத்துகிறார்கள்.
            இரைச்சல்கள் இல்லா ஒரு படம் தரும் அனுபவம் என்பது, ஒரு நாவலின் ஆழ்ந்த மௌன வாசிப்பை போல் நிறைவாய், பக்கங்களை முடித்து வைத்து எழுத்து செல்வதை போல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முடிந்துவிடும்.அந்த கலை அனுபவத்தை மொத்த படக்குழுவும் அர்ப்பணிப்போடு வழங்கியிருக்கிறார்கள்.
          இந்த வரிகள் ஒரு முன்குறிப்பை போல உங்களை இந்த திரைப்படத்திற்கு அழைத்து செல்லட்டும்.
#காதலே காதலே தனிப்பெருந்துணையே..
#கூடவா ..கூடவா.. போதும் ..போதும் .
                                                                                           
                                                                                                    ---------------------பாரதிசரண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக