வெள்ளி, 19 ஜூன், 2020

நிலை பெறுதல்



நீல விசும்பில் நீந்தி செல்கிறது பருந்து 
அந்தரத்தில் அலைதலில் நிலை கொள்கிறது 
வாழ்வு எல்லாம் வெளியோடு மட்டும் உரசி கொண்டிருக்கிறது 
எடையற்று இருத்தலின் இயல்பை ஏற்றிருக்கிறது.
ஆகாயம் முழுதும் ஆள்கிறது 
இறை என உயரத்தில் இருந்து 
இயங்கும் உலகை தாழ்த்தி பார்க்கிறது
ஒரு நாளின் ஒரு பொழுதேனும் 
மண் மேல் கால் பதித்து பறவையாய் ஆகி விடுகிறது.

                      ---------------------------பாரதி சரண்

வியாழன், 14 மே, 2020

உய்வுற்றிருத்தல்


 
    
                                                                                           


ஓரங்களில் மரங்கள் மட்டும் ஓங்கி நிற்க்க 
நிராதவராய் கிடக்கிறது கரும் சாலை 
மைனாவின் விழிப்பும் , நாய்களின் குறைப்பும் , காகங்களின் கரையலுமாய் 
ஓவென்று காதை அறைகிறது முற்பகல் காற்று .
வண்டியிலிருந்து தவறி விழுந்த தர்பூசணி ஒன்று 
சிதையாமல் நடு ரோட்டில் உருண்டு நிற்கிறது.
கழுத்து மணி ஒலிக்க ஒயிலாக நடை வைத்து செல்கிறது 
இளங் காளை 
தூரத்தில் ஒரு பாட்டையா மினுக்கும் கருதேகத்தில் 
வெள்ளாடையில் முன்னேறிவர 
கடக்கும் ஒரு நொடியில் 
என் மகனும் அவரும் வாயோடு கட்டி வைத்த முகக்கவசம் அவிழ்க்காமல் 
தாடை இழுபட ஒரு புன்னகை பரிமாறி கொள்கிறார்கள்.
நிர்வாணம் மறைக்க இலையாடை கண்டடைந்த அந்த தொல் மனிதனை 
நினை கொள்கிறேன்.
                                                                                  
                                                                                     --------------------பாரதிசரண்